Monday, 19 October 2026

தீபாவளி “பெயருக்கு முக்கியத்துவம் இல்லையா? ஊ கா லியோங் , சிந்தித்துப் பாருங்கள்!

17 October, Kuala Lumpur

தீபாவளி என்பது மலேசியாவில் லட்சக்கணக்கான இந்தியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்பாட்டு மற்றும் சமயப் பண்டிகையாகும். இத்தகைய சிறப்புமிக்க பண்டிகையின் கொண்டாட்டங்களுக்கு முக்கிய மையமாக விளங்கும் கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதியில், தீபாவளி வாழ்த்துப் பதாகைகளில் Deepavali என்பதற்குப் பதிலாக Diwali என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், ஜனநாயகச் செயல் கட்சியின் (DAP) இளைஞர் அணியான DAPSY-யின் தேசியத் தலைவரும் பினாங்கு மாநிலத்தின் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான ஊ கா லியோங், தீபாவளியை Diwali என்று குறிப்பிடுவது தொடர்பான விவகாரத்தைப் பெரிய சர்ச்சையாக்காமல், அதைவிட முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்தலாம் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.

ஊ கா லியோங் அவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி.

அரசியல் நிகழ்ச்சிகள் அல்லது பொதுநிகழ்ச்சிகளுக்கான பதாகைகளில் உங்கள் பெயரான Woo Kah Leong என்பதைத் தவறாக எழுதி, உங்கள் பெயரின் சரியான அடையாளத்தை மாற்றினால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

உங்கள் பெயரைத் தவறாகக் குறிப்பிடுவது உங்களுக்குச் சாதாரணமான விஷயமாகத் தோன்றுமா? உங்கள் பெயருக்குரிய சரியான அடையாளத்தையும் மரியாதையையும் நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்களா?

ஒரு தனிநபரின் பெயருக்கே உரிய அடையாளமும் மரியாதையும் இருக்கும்போது, லட்சக்கணக்கான இந்தியர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையின் பெயருக்கும் அதே அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டாமா?

மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ விடுமுறைப் பட்டியலில் Deepavali என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. அப்படியிருக்க, அந்தப் பண்டிகையின் பெயர் தொடர்பான ஆட்சேபனையை ஒரு சாதாரண விஷயமாகக் கருதிவிட முடியுமா?

இருபது ஆண்டுகளுக்கு முந்தய சம்பவம்…

திரு, ஊ கா லியோங் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.

அந்தக் காலகட்டத்தில் PERNAS (பர்னாஸ்) நிறுவனத்துடன் தொடர்புடைய மண்டரின் ஆரஞ்சுப் பழ விநியோக விவகாரம் அப்போது பல இடங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

சீனப் புத்தாண்டின்போது வழக்கமாகச் சீன வர்த்தகர்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் மண்டரின் ஆரஞ்சுப் பழங்களை, அந்த ஆண்டு PERNAS நிறுவனம் சீனாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்து மலேசியாவில் விநியோகிக்க முனைந்தபோது சர்ச்சை எழுந்தது.

அந்தச் சம்பவத்தில், இறக்குமதி செய்யப்பட்ட ஆரஞ்சுப் பழங்கள் கப்பலிலிருந்து இறக்கப்படாமலேயே போயின.

அந்தக் காலத்தில் இந்த விவகாரம் பல இடங்களில் விவாதிக்கப்பட்டது. ஒரு சமூகத்தின் பண்டிகையுடன் தொடர்புடைய பொருளின் விநியோகத்தில் ஏற்பட்ட சர்ச்சை எந்த அளவுக்குப் பெரிதாகப் பேசப்பட்டது என்பதை அன்றைய நிகழ்வுகள் எனக்கு நினைவூட்டுகின்றன.

ஒரு சமூகத்தின் பண்டிகையுடன் தொடர்புடைய வணிக நடவடிக்கையே இவ்வளவு பெரிய விவாதத்தையும் எதிர்வினையையும் ஏற்படுத்தியிருக்குமானால், மற்றொரு சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்துடன் தொடர்புடைய விவகாரத்தை ஏன் அவ்வளவு சாதாரணமான ஒன்றாகக் கருத வேண்டும்?

தீபாவளி என்பது வெறும் பெயர் விவகாரம் அல்ல!

தீபாவளி என்பது மலேசியாவில் இந்தியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்பாட்டு மற்றும் சமயப் பண்டிகையாகும். அதன் பெயர், மரபு, அடையாளம் ஆகியவை இந்தியச் சமூகத்தினருக்கு உணர்வுபூர்வமான முக்கியத்துவம் கொண்டவை

இங்கு எழுப்பப்படும் கேள்வி, எந்தச் சொல் உலகளவில் சரியானது என்பது மட்டுமல்ல. மலேசியாவில் ஒரு சமூகத்தின் அடையாளம் தொடர்பான ஆட்சேபனையை முன்வைக்கும்போது, அந்தக் குரலுக்கு உரிய மதிப்பளிக்கப்படுகிறதா என்பதுதான்.

திரூ , ஊ கா லியோங் முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது அவசியம்தான். ஆனால், ஒரு சமூகத்தின் பெயர், மொழி, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாப்பதும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றுதான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பெயர் என்பது வெறும் எழுத்துகளின் தொகுப்பு அல்ல. அது அடையாளம், பாரம்பரியம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது. தனிநபரின் பெயருக்கு உரிய மரியாதையை எதிர்பார்க்கும் நாம், லட்சக்கணக்கான இந்தியர்களால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையின் பெயருக்கும் உரிய மரியாதையை வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, சம்பந்தப்பட்ட அனைவரும் கூடுதல் கவனத்துடனும் பரஸ்பர மரியாதையுடனும் செயல்படுவார்கள் என நம்புவோம்.

மற்றவர்களின் அடையாளத்தை மதிப்போம்; அதே மரியாதையை நமது அடையாளத்திற்கும் எதிர்பார்ப்போம்.admin@sabthamstv